×

மோசடி புகாரில் லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு..!!

பெங்களூரு: மோசடி வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் செளந்தர்யா இயக்கத்தில் வெளியான படம் ‘கோச்சடையான்’. இப்படத்தின் தயாரிப்பு நிறுவனங்களில் ‘மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட்’ நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்தை சேர்ந்த முரளி என்பவர் கோச்சடையான் படத்திற்காக ‘ஆட் பீரோ’ நிறுவனத்தைச் சேர்ந்த அபிர்சந்த் நஹாவர் என்பவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றிருந்தார்.

இந்த கடன் தொடர்பாக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாத கையொப்பம் செய்திருந்தார். பின்பு முரளி கடனாக பெற்ற பணத்தை திருப்பி தராததால் முரளி மற்றும் லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015ம் ஆண்டு பெங்களூரு மாநகர 6வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் அபிர்சந்த் நஹாவர் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி லதா ரஜினிகாந்த் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த மனுவிற்கு எதிராக ஆட் பீரோ நிறுவனம் உச்சநீதிமன்றத்துக்கும் சென்றது.

உச்சநீதிமன்றத்தில் இது மோசடி புகார் என்பதால் இந்த வழக்கு விசாரணையை கீழமை நீதிமன்றமே தொடரலாம் என்று கூறிவிட்டது. அதன்படி கீழமை நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடர்ந்த போது, நீண்ட காலமாக நேரில் ஆஜராகவில்லை என்ற அடிப்படையில், லதா ரஜினிகாந்துக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டிருந்தது. அதன்படி, பெங்களூரு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான லதா ரஜினிகாந்த், பிடிவாரண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரியும், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறும் கேட்டுக் கொண்டார். இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்ற நீதிபதி ஆனந்த் கரியன்னவர், லதா ரஜினிகாந்துக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கினார். தொடர்ந்து வழக்கை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

The post மோசடி புகாரில் லதா ரஜினிகாந்திற்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி பெங்களூரு நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Bengaluru Court ,Lata Rajinikanth ,Bengaluru ,Dinakaran ,
× RELATED “வெறுப்புக்கு எதிராக நான் வாக்களித்துவிட்டேன்; நீங்களும்…”: பிரகாஷ் ராஜ்